கிரீன்லாந்து-வை கைப்பற்றுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
ஐரோப்பிய நாடான டென்மார்க்-க்கு உட்பட்ட தன்னாட்சி பிரதேசமாக கிரீன்லாந்து உள்ளது. எண்ணெய், அரிய கனிம வளங்கள் நிறைந்த இந்த தீவு, புவி வெப்பமயமாதலால் புதிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் உருவாகி வருவதால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம்” என கூறி வரும் டிரம்ப்,
“எளிதான முறையில் ஒப்பந்தம் செய்யலாம்; இல்லையெனில் கடினமான வழியில் செய்வோம்” என வெளிப்படையாக அச்சுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், கிரீன்லாந்து பார்லிமென்டில் அதிக பிரதிநிதித்துவம் கொண்ட 5 முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்,
“நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை. நாங்கள் கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புகிறோம். எங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கே உண்டு. கிரீன்லாந்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற அமெரிக்க மனப்பான்மைக்கு முடிவு கட்ட வேண்டும்”
என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டு அறிவிப்பு, டிரம்பின் கருத்துகளுக்கு எதிரான அரசியல் போர்க்கொடி எனக் கருதப்படுகிறது.
