சென்னை:
தி.மு.க., ஆட்சியில் எத்தனை தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து, முதல்வர் ஸ்டாலினுக்கே தெளிவில்லை என, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க., ஆட்சி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பதே முதல்வருக்கு தெரியாத நிலை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே முதல்வரின் பணியாகிவிட்டதாகவும் அவர் சாடினார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட சதவீதத்தில் தொடர்ந்து மாறுபட்ட தகவல்கள் வெளியிடப்படுவது, மக்களை குழப்பும் நாடகமே என அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த 2023 செப்டம்பரில் 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறிய முதல்வர், கடந்த வாரம் அதையே 72% என தெரிவித்ததாகவும், தற்போது 80% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இது முழுக்க முழுக்க தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை என்றும், போலியான வாக்குறுதிகள் மூலம் மீண்டும் மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
