விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை: டிரம்ப் அழைப்பை நிராகரித்த மோடி
நியூயார்க்:
இந்திய விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலனில் ஒருபோதும் சமரசம் இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, அமெரிக்க வர்த்தக அமைச்சர் வெளிப்படையாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசியில் பேசுவதற்கு பிரதமர் மோடி மறுத்து விட்டதாக, முதல் முறையாக அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்டு லுட்னிக் புலம்பியுள்ளார்.
இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக இழுபறியில் உள்ளன. அமெரிக்க வேளாண் மற்றும் பால் பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க வேண்டும் என்பது டிரம்ப் அரசின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இந்திய விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி இந்த கோரிக்கையை இந்தியா உறுதியாக நிராகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “என்ன விலை கொடுத்தாலும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலனில் இந்தியா சமரசம் செய்யாது” என்று அறிவித்திருந்தார். அந்த நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கவில்லை என்பதே தற்போதைய நிலவரம்.
இதுகுறித்து பேசிய லுட்னிக், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் தயாராக இருந்ததாகவும், அதை இறுதி செய்ய பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேச வேண்டும் என இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். மூன்று வெள்ளிக்கிழமைகள் கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும், அந்த அழைப்பை இந்தியா ஏற்கவில்லை என அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, இந்தியாவை விட பின்னடைந்திருந்த வியட்நாம், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை முடித்துவிட்டதாகவும் லுட்னிக் கூறினார். இந்தியாவில் உள்ள அரசியல் சூழல் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் ஒப்பந்தத்திற்கான கதவு இன்னும் திறந்தே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச ஊடகங்கள் சில, டிரம்ப் உடன் பேச மோடி மறுத்ததாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
