நியூயார்க்:
அமெரிக்கா 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிராக, ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றன என்ற காரணத்தை முன்வைத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதில், 35 அமைப்புகள் ஐநாவுடன் நேரடி தொடர்பில்லாதவை என்றும், மீதமுள்ள 31 அமைப்புகள் ஐநாவுடன் இணைந்த அமைப்புகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய அமைப்புகள் மற்றும் ஐநா அமைதி பணிகள் சார்ந்த அமைப்புகளும் இதில் அடங்கும்.
இந்த அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்துமாறு அமெரிக்க அரசு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவுக்கு ஐநா தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் சார்பில் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“ஐக்கிய நாடுகள் சபையின் பல அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகும் முடிவுக்கு பொதுச்செயலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார். பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஐநா அமைப்புகளுக்கான நிதி பங்களிப்புகளை வழங்குவது, அமெரிக்கா உட்பட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சட்டப்பூர்வ கடமையாகும்.”
மேலும், “ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து அமைப்புகளும், உறுப்பு நாடுகள் வழங்கிய பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். நம்மை சார்ந்திருக்கும் மக்களுக்காக செயல்படுவது ஐநாவின் பொறுப்பு. அந்த பணிகளை உறுதியுடன் தொடருவோம்,” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
