முதல்வரே விசாரணைக்கு தடையா? மம்தா மீது அமலாக்கத்துறை கடும் குற்றச்சாட்டு
கோல்கட்டா:
மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் பணமோசடி மற்றும் நிலக்கரி கடத்தல் தொடர்பான விசாரணைகளில், முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக தலையிட்டு இடையூறு செய்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை, கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே அரசியல் மோதல் தீவிரமாகியுள்ளது. தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்களில் மம்தா பானர்ஜி பாஜவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக பணிகளை மேற்கொள்ளும் ஐபேக் நிறுவனத்தின் அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 8ம் தேதி சோதனை நடத்தினர். இந்த தகவலை அறிந்த மம்தா பானர்ஜி, சோதனை நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அங்கு அவர் பேசுகையில், கட்சி தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றுவது அமலாக்கத்துறையின் வேலையா என கேள்வி எழுப்பினார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குற்றம்சாட்டியும் கருத்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஐபேக் நிறுவன இயக்குநரும், திரிணமுல் காங்கிரசின் ஐடி விங் தலைவருமான பிரதிக் ஜெயின் வீட்டிற்கும் மம்தா சென்றார். அங்கும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வந்தது. இந்த இடத்தில் இருந்து மொபைல் போன், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை மம்தா எடுத்துச் சென்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, இந்த சோதனை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், தேர்தலை குறிவைத்து கட்சி தொடர்புடைய ஆவணங்களை கைப்பற்ற முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். வேட்பாளர் பட்டியலுடன் தொடர்புடைய ஆவணங்களை பாதுகாப்பதற்காகவே அவற்றை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த சோதனை எந்த அரசியல் கட்சியையும் இலக்காக கொண்டு நடத்தப்படவில்லை என்றும், நிலக்கரி கடத்தல் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கமான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. விசாரணையில் தொடர்புடைய ஒருவர் ஐபேக் நிறுவனத்திற்கு 10 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், முதல்வரின் வருகையைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் பிறர் ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை வலுக்கட்டாயமாக பறித்ததால் விசாரணைக்கு தடையாக அமைந்ததாகவும், இது அரசியலமைப்புக்கு எதிரான செயல் எனவும் அமலாக்கத்துறை தனது மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த மனு மீது கோல்கட்டா உயர்நீதிமன்றம் நாளை விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
