ஆசிரியர்களை அச்சுறுத்தும் திமுக அடக்குமுறை; கல்விக்கு பேராபத்து – அண்ணாமலை
சென்னை: ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தி, அவர்களின் உரிமைகளை நசுக்கும் திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக மாதம் ரூ.12,500 என்ற குறைந்த ஊதியத்தில், பணி நிரந்தரமின்றி வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல், இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கோரி, கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கட்சி தனது 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கைகளில், ஆசிரியர்களின் ஊதியச் சீரமைப்பு மற்றும் சம ஊதியம் குறித்து வாக்குறுதிகள் அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், முதல்வர் ஸ்டாலின் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாணவர்கள் சாதனை படைக்கும் போது, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு பெருமை பேசும் முதல்வர், அந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் வாழ்க்கை பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருப்பதை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், ஊதியம் வழங்க மாட்டோம் என அச்சுறுத்துவது, முதல்வரின் ஒப்புதலுடன் நடந்த திட்டமிட்ட அடக்குமுறையாகவே பார்க்கப்படுகிறது.
சமத்துவம், சமூகநீதி என்று மேடைகளில் பேசும் திமுக அரசு, நடைமுறையில் ஆசிரியர்களுக்கு அநீதியும் அச்சுறுத்தலுமே வழங்கி வருகிறது. பகுதி நேர ஆசிரியர்களின் நீண்டகால வலி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் தொடர்ச்சியான போராட்டம், திமுக அரசு ஆசிரியர்களுக்கு செய்துள்ள துரோகத்தை வெளிப்படையாக காட்டுகிறது.
ஆசிரியர்களை அடக்கி, அச்சுறுத்தும் இந்த அரசின் போக்கு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. ஆசிரியர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் வழங்கப்பட்டால் மட்டுமே சமூகம் முன்னேறும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஆசிரியர்களை குற்றவாளிகளாக நடத்தும் திமுக அரசின் இந்த அடக்குமுறையை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கான பதில் விரைவில் திமுகவுக்கு கிடைக்கும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
