டாக்கா: வங்கதேசத்தில் தன்னை துரத்தி வந்த கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற 25 வயது ஹிந்து இளைஞர், கால்வாயில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Muhammad Yunus தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதிலிருந்து, வங்கதேசத்தில் ஹிந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வகை வன்முறைகள் மேலும் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 2 முதல் 35 நாட்களுக்குள், வங்கதேசம் முழுவதும் குறைந்தது 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவங்களுக்கான காரணங்கள் வேறுபட்டதாக கூறப்பட்டாலும், உயிரிழந்த அனைவரும் ஹிந்துக்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், நவோகான் மாவட்டம் மகாதேப்பூர் பகுதியில், பந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மிதுன் என்ற 25 வயது ஹிந்து இளைஞர், தன்னை துரத்திய கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற போது அருகிலிருந்த கால்வாயில் குதித்துள்ளார். இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து மிதுனின் உடலை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
