இந்தியாவில் நடைபெறவுள்ள Indian Premier League கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை விதித்து, அந்நாட்டு இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசன் மார்ச் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான் ஐபிஎல் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது, வங்கதேசத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த முடிவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை வெளிப்படையாக வெளிக்காட்டப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். “எந்த சூழ்நிலையிலும் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது” என அவர் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, அடுத்த உத்தரவு வரும் வரை ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களில் ஒளிபரப்பப்படக் கூடாது என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
