அரசியல் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு புதிய எஸ்.ஓ.பி.; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, விஜய் பங்கேற்ற பிரசார நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அரசியல் நிகழ்வுகளுக்கு எஸ்.ஓ.பி. வகுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பரிந்துரைகள், கருத்துகளை பரிசீலித்து, இறுதி விதிகளை ஜனவரி 5க்குள் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தமிழக அரசு தற்போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
🔹 முக்கிய வழிகாட்டு விதிமுறைகள்:
5,000 பேருக்கு மேல் கூடக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு இவ்விதிகள் பொருந்தும்
வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத நிகழ்வுகளுக்கு இவ்விதிகள் பொருந்தாது
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலங்களில், தேர்தல் ஆணைய விதிகள் மட்டுமே அமலில் இருக்கும்
கூட்ட கட்டுப்பாடு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு
நிகழ்ச்சி தேதி, நேரம், நோக்கம், பங்கேற்போர் எண்ணிக்கை, வாகன விவரம், முக்கிய தலைவர்கள் விபரம் ஆகியவை முன்கூட்டியே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்
50,000 பேருக்கு மேல் கூடும் மாநாடுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்
நிகழ்ச்சியின் போது சொத்து சேதம் ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை ஏற்பாட்டாளர்களே வழங்க வேண்டும்
நிகழ்ச்சி முடிந்ததும், இடத்தை முழுமையாக துாய்மை செய்து ஒப்படைக்க வேண்டும்
கர்ப்பிணி பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்
மேலும், நிகழ்ச்சி துவங்குவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
