திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் ஹிந்து விரோத திமுக–இண்டி கூட்டணியை அம்பலப்படுத்தியது: பியூஷ் கோயல்
புதுடில்லி: திமுக மற்றும் இண்டி கூட்டணி ஹிந்துக்களுக்கு எதிரானவை என்பது தற்போது தெளிவாக அம்பலமாகி இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அந்த தீர்ப்பையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அளித்த பேட்டியில் பியூஷ் கோயல் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல நூற்றாண்டுகளாக முருகனை வழிபட்டு தீபம் ஏற்றும் பாரம்பரியம் நடைமுறையில் உள்ளது. அந்த பழமையான வழக்கத்திற்கு நீதிமன்றம் இன்று நீதி வழங்கியுள்ளது. இது பக்தர்களுக்கு மனநிறைவை அளிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து சனாதன தர்மத்தை விமர்சிப்பதும், கேலி செய்வதும் சாதாரண நிகழ்வுகள் அல்ல. 2023 செப்டம்பர் 2ஆம் தேதி சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசிய சில மாதங்களுக்குப் பிறகே, முதன்முறையாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தடுக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளை தனித்தனியாகப் பார்க்க முடியாது.
2024ஆம் ஆண்டு பாரம்பரிய வழக்கம் தொடர அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்கள் நீதிமன்றத்தை நாடினர். அதன் தொடர்ச்சியாக 2025 டிசம்பர் 1ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பின் மூலம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ளது.
ஆனால், அந்த தீர்ப்புக்கும் எதிராக அரசு மேல்முறையீடு செய்தது, ஹிந்து தர்மத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் எதிரான திமுக அரசின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. இது ஸ்டாலின், அவரது மகன், திமுக மற்றும் இண்டி கூட்டணியில் உள்ள அவர்களின் கூட்டாளிகளின் வெறுப்பான அரசியலைக் காட்டுகிறது.
ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்புக்காக அவரை மதச்சார்பற்றவர் அல்ல என குற்றம் சாட்டி, பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர முயற்சிப்பது நீதித்துறையை அச்சுறுத்தும் செயலாகும். இதில் இண்டி கூட்டணியின் பல்வேறு எம்பிக்களும் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இது பழங்கால வழக்கம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மாநில அரசின் சட்டம்–ஒழுங்கு குறித்த வாதம் கற்பனையானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட சமூகத்தை திருப்திப்படுத்தும் ஓட்டு வங்கி அரசியலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதன் மூலம் திமுக மற்றும் இண்டி கூட்டணி ஹிந்துக்களுக்கு எதிரானவை என்பது முழுமையாக அம்பலமாகியுள்ளது. இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
