பனாஜி: கோவா கப்பல் கட்டும் தளத்தில் சமுத்திர பிரதாப் கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.
இரண்டு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களில் முதலாவதாக, சமுத்திர பிரதாப் கப்பல் இன்று (ஜனவரி 05) கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் இதுவாகும்.
இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 60 சதவீதம் உள்நாட்டைச் சேர்ந்தவை. 114.5 மீட்டர் நீளமும், 4,200 டன் எடையும் கொண்ட இந்த கப்பல், 6,000 கடல் மைல் தூரம் வரை பயணம் செய்யக்கூடியது. இதில் ரசாயன கண்டுபிடிப்பு கருவிகள், தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் மாசு அகற்றும் பல்வேறு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தொலைநோக்கு பார்வையுடன் இந்திய கடலோர காவல்படையில் சமுத்திர பிரதாப் கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. கடல் வளங்கள் எந்த ஒரு நாட்டிற்கும் மட்டும் சொந்தமானவை அல்ல. கடலோர காவல்படையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்து முன்னுரிமை வழங்கியதில் பெருமை கொள்கிறேன். இந்த கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையையும் வலிமையையும் அதிகரிக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பிரமோத் சாவந்த், மத்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
