மதுரை: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருந்தது. அதில், மாணவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா, அவர்களின் பெற்றோர் சிறையில் உள்ளனரா, அவர்கள் அகதிகளா உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பாணையை எதிர்த்து அமீர் ஆலம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜனவரி 5) விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின் போது, “மாதிரி பள்ளி” என்று கூறி ஏன் இந்த தகவல்களை கேட்கிறீர்கள்? இதை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிமன்றம், இந்த தகவல்கள் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் என்றும், மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் உணர்வுப் பூர்வமானவை என்றும் குறிப்பிட்டது. அரசு பள்ளிகளில் கேட்பது போல், தனியார் பள்ளிகளிலும் இதே தகவல்கள் கேட்கப்பட்டுள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியது.
மேலும், இவ்வாறு தகவல்களை சேகரிப்பது மாணவர்களுக்கு மனச்சோர்வை உருவாக்கும் எனக் கூறி, தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
