ஐபிஎல் 2026 தொடரில் வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவதை தவிர்க்குமாறு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு எதிராக தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டு வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்ததற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த பின்னணியில், முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் போட்டிகளில் இருந்து நீக்குமாறு கொல்கத்தா அணியிடம் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்கு மாற்றாக வேறொரு வீரரை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா அணி, 2026 ஆம் ஆண்டு தொடருக்காக முஸ்தாபிசுர் ரஹ்மானை ரூ.9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 2016 முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர், சென்னை, மும்பை, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடியுள்ள நிலையில், முதல் முறையாக கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
