பார்லிமென்ட் விவாதத்தின் போது ராகுல் எங்கே? காங்கிரசை கேள்வி எழுப்பிய சிவராஜ் சவுகான்
புதுடில்லி: 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தின் போது, பார்லிமென்டில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அப்போது அவர் எங்கே சென்றார்? என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் அமல்படுத்தப்பட்டு, 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த டிசம்பரில், மத்திய அரசு இந்தத் திட்டத்தின் கீழான வேலை நாட்களை 125 ஆக உயர்த்தியதுடன், அதற்கு
‘வி.பி.–ஜி ராம்–ஜி’ (விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் – கிராமின்) என பெயர் மாற்றமும் செய்துள்ளது.
இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனவரி 10 முதல் பிப்ரவரி 25 வரை போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் சிவராஜ் சவுகான் கூறியதாவது: காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அதிக அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட புதிய மசோதா மீதான விவாதத்தின் போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பார்லிமென்டில் பங்கேற்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
“அப்போது அவர் எங்கே சென்றார்?” என கேள்வி எழுப்பிய அவர், ‘வி.பி.–ஜி ராம்–ஜி’ சட்டம் குறித்து காங்கிரஸ் பொய்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார். இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக **நரேந்திர மோடி**க்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக ரூ.1,51,282 கோடி ஒதுக்கப்படும் என்றும், இதில் ரூ.95,600 கோடி மத்திய அரசால் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தத் தொகை 125 நாட்கள் வேலை வழங்க போதுமானதாக இருக்கும் என்றும், கிராம வளர்ச்சியை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். புதிய திட்டம் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும்; பழைய திட்டத்தை விட இது மிகவும் சிறந்தது என்றும் சிவராஜ் சவுகான் கூறினார்.
