புதுடெல்லி: டில்லியில் கூட்டணி, கேரளாவில் எதிரிகள் என இரட்டை அரசியல் நடத்தும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ‘மேட்ச் பிக்சிங்’ விரைவில் முடிவுக்கு வரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாநகர மேயராக பதவியேற்ற வி.வி. ராஜேஷ் மற்றும் துணை மேயர் ஜி.எஸ். ஆஷா நாத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், பண்டிகைக் காலத்திலும் புதிய ஆண்டின் தொடக்கத்திலும் திருவனந்தபுரம் நகரில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது வரலாற்றுச் சிறப்புடையது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக கேரளாவில் பாஜ தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆதிக்கத்தில் மோசமான நிர்வாகம், ஊழல் மற்றும் வன்முறை கலாசாரம் உருவாகியுள்ளதாகவும் பிரதமர் விமர்சித்துள்ளார். டில்லியில் கூட்டணியாகவும், கேரளாவில் எதிரிகளாகவும் நடிக்கும் இவர்களின் அரசியல் நாடகம் நீண்ட காலம் நீடிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த திருவனந்தபுரம் மேயர் வி.வி. ராஜேஷ், இது கேரளாவுக்கு பிரதமர் மோடி வழங்கிய புத்தாண்டு பரிசு போன்றது என்றும், திருவனந்தபுரத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பாஜ தொண்டர்களின் பல ஆண்டுகால உழைப்பின் விளைவு என்றும் தெரிவித்துள்ளார்.
