தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான் கடும் விமர்சனம்
மதுரை: தமிழிலிருந்து திருக்குறளை நீக்க முடியாதது போலவே, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமேஸ்வரத்தில் காசி–தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக கூறினார். பிரதமரின் வழிகாட்டுதலின்படி, கலை, பண்பாடு மற்றும் கலாசாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கையின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியே கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் தமிழ் தான் கல்வி போதிக்கும் மொழியாக இருக்க வேண்டும் என்பதே அந்தக் கொள்கை என்றும் அவர் கூறினார். தமிழுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு அனுமதி மறுத்து, அரசியல் ரீதியாக விவகாரத்தை கையாளுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் விமர்சித்தார். ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது என்றும், இதனை யாராலும் தடுக்க இயலாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த பூரணசந்திரனின் குடும்பத்தினரை தர்மேந்திர பிரதான் சந்தித்தார். பூரணசந்திரனின் தந்தை மற்றும் சகோதரர், அவரது விருப்பப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அவரது குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பூரணசந்திரனின் மனைவி இந்துமதி சார்பில் மனுவும் அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த கனிமொழி, தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை முதலில் விடுவிக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு பிற விஷயங்களைப் பற்றி பேசலாம் என்றும் மத்திய அரசை விமர்சித்தார்
