‘ஐந்தாண்டு கால ஆட்சியும் நமக்கு போராட்டமே’ – ஸ்டாலின்
சென்னை: “தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து உறுதியாக போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலகம் முழுவதும் மக்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதாகவும், தமிழக மக்களுக்கு 2026 ஆம் ஆண்டு நம்பிக்கை நிறைந்த ஆண்டாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
அரசியலில், ஆளுங்கட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதும், எதிர்க்கட்சி போராடுவதும் இயல்பானது. ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சி செயலற்ற நிலையில் இருப்பதாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக ஆளுங்கட்சியான தி.மு.க., தான் தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி முழுவதும் உரிமைப் போராட்டமாகவே அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தில் பெயர் மாற்றம் மற்றும் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தத் திட்டத்தையே முடக்க முயலும் மத்திய அரசை எதிர்த்து தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் போராடி வருவதாகவும், தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ., அரசுக்கு எதிராகவும் தி.மு.க., போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி உரிமை, வரி உரிமை, சட்ட உரிமை என அனைத்திற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், உரிமைப் போர்க்களத்தில் உறுதியுடன் நின்று, ஒருபுறம் போராடியும் மறுபுறம் மக்கள் நலனைப் பாதுகாத்தும் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அந்த ஆதரவை சிதைக்க எதிரிகள் வகுக்கும் வியூகங்களை முறியடித்து, ஜனநாயகப் போர்க்களத்தில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
