மிக இளம் வயதில் தென் துருவத்தை எட்டிய முதல் இந்தியர்; இளம்பெண்ணுக்கு கடற்படை பாராட்டு
புதுடில்லி: இந்திய கடற்படை அதிகாரி கார்த்திகேயனின் மகளான காம்யா கார்த்திகேயன் (18), மிக இளம் வயதில் தென் துருவத்தை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு இந்திய கடற்படை பாராட்டு தெரிவித்துள்ளது.
மும்பையில் உள்ள கடற்படை பள்ளியில் கல்வி பயின்ற காம்யா, மலையேற்றத்தில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் கொண்டவர். அவரது மலையேற்ற பயணம் 2017ஆம் ஆண்டு ஆப்ரிக்காவின் கிளிமாஞ்சாரோ மலை ஏற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் எல்ப்ரஸ் (2018), ஆஸ்திரேலியாவின் கோசியுஸ்கோ (2019), தென் அமெரிக்காவின் அகோன்காகுவா (2020), வட அமெரிக்காவின் டெனாலி (2021), எவரெஸ்ட் (2023) மற்றும் ஆண்டார்டிகாவின் வின்சன் மலை சிகரம் (2024) ஆகியவற்றை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த தொடர் சாதனைகளுக்காக கடந்த ஆண்டே இந்திய கடற்படை அவரது முயற்சிகளை பாராட்டியிருந்தது. இந்நிலையில், அவர் தற்போது தென் துருவத்தை அடைந்து மேலும் ஒரு முக்கிய சாதனையை பதிவு செய்துள்ளார். 18 வயதில் இந்த இலக்கை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இது குறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், காம்யா உலகளவில் இரண்டாவது இளம்பெண் என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் கடுமையான வானிலை, பலத்த காற்று ஆகியவற்றை எதிர்கொண்டு, சுமார் 60 கடல் மைல்கள் தூரம் தனது முழு பயண சுமையையும் இழுத்துக்கொண்டு நடந்து, கடந்த டிசம்பர் 27ஆம் தேதி தென் துருவத்தை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காம்யாவின் இந்த அசாதாரண சாதனை, அவரது தலைமுறையைச் சேர்ந்த பலரையும் தங்களின் எல்லைகளைத் தாண்டி முன்னேற ஊக்குவிக்கும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு துருவத்தை கைப்பற்றும் அவரது அடுத்த இலக்கிற்காக வாழ்த்துகளும் தெரிவித்துள்ளது.
