ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி; அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி:
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான தலமாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருஅத்யயன உற்சவம் என அழைக்கப்படும் இந்த பெருவிழா, பகல் பத்து திருமொழி திருநாள் மற்றும் ராப்பத்து திருவாய்மொழி திருநாள் என மொத்தம் 21 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த ஜனவரி 30ஆம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல் பத்து திருநாள் நடைபெற்றது.
பகல் பத்து திருநாளின் போது, உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பகல் பத்து திருநாளின் 10ஆம் நாளில், நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியார் திருக்கோலம்) பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதல் மூலவர் ரங்கநாதருக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, அதிகாலை 4 மணியளவில் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கேட்டான் வாயில், தங்கக்கொடிமரம், குலசேகரன் திருச்சுற்று வழியாக விரஜா நதி மண்டபத்தை அடைந்தார். அங்கு வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதினர்.
அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக நம்பெருமாள் வெளியே பிரவேசித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் “ரங்கா, ரங்கா” என பக்திப் பரவசத்துடன் கோஷமெழுப்பினர்.
சொர்க்கவாசலைக் கடந்து வந்த நம்பெருமாள், சந்திர புஷ்கரணி, ராமர் சந்நிதி மற்றும் நடைப்பந்தல் வழியாக திருக்கொட்டகையை அடைந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு நம்பெருமாளுக்கு சாதரா மரியாதை செய்யப்பட்டது.
பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்துக்கு வந்த நம்பெருமாளுக்கு அலங்காரம் மற்றும் அமுது செய்யப்பட்டு, காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலையில் அரையர் சேவை, இரவு திருப்பாவாடை கோஷ்டி, வெள்ளிச்சம்பா அமுது செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இறுதியாக, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வீணை வாத்தியத்துடன் புறப்பட்ட நம்பெருமாள், இரவு 12 மணியளவில் மூலஸ்தானத்தை சென்றடைவார்.
