தேசிய நலன் மீதான பற்றால் உயர்ந்தவர் பிரதமர் மோடி: அமித் ஷா
புதுடில்லி:
நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய நலன் மீதான உறுதியான பற்றே பிரதமர் மோடியை உயர்ந்த பதவிக்கு கொண்டு சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டினார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சன்ஸ்கர்தமில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ‘நமோத்சவ்’ நிகழ்ச்சியை நேற்று (டிசம்பர் 28) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 150 கலைஞர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, இது ஒரு சாதாரண கலாசார நிகழ்ச்சி அல்ல என்றும், இந்தியாவின் தன்னம்பிக்கையும் உறுதியையும் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளில் 140 கோடி இந்தியர்களுக்கு, இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையை அளித்த தலைவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதே ‘நமோத்சவ்’ என்றும் அவர் கூறினார்.
செயல், திட்டமிடல் மற்றும் முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணிக்கும் மனப்பாங்கு இருந்தால்தான் இத்தகைய சாதனைகள் சாத்தியம் என குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி ஒரு சாதாரண தலைவர் அல்ல என்றும், உறுதியான நிலைப்பாடு கொண்ட அசாதாரண ஆளுமை என்றும் வர்ணித்தார். பல சூழ்நிலைகளில் தலைவர்கள் உருவானாலும், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய நலன் மீதான பற்று காரணமாக மிக உயர்ந்த பதவியை அடைந்த ஒரே தலைவர் மோடி தான் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கிய பிரதமர் மோடி, இன்று 29 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற பிரதமராக உயர்ந்துள்ளதாகவும், இது 140 கோடி இந்தியர்களுக்குக் கிடைத்த கவுரவம் என்றும் அமித் ஷா கூறினார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 11 ஆண்டுகளில் 27 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள், இலவச கியாஸ் இணைப்புகள், கழிப்பறைகள், சுத்தமான குடிநீர், வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார். ‘நமோத்சவ்’ இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக அமையும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
