அவனியாபுரம்:
நான்காம் காசி தமிழ் சங்க நிறைவு விழாவில் பங்கேற்க வந்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மதுரை விமான நிலையத்தில் தெரிவித்தார்.
அவர் பேசுகையில், மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக காசி தமிழ் சங்கத்தை சிறந்த முறையில் நடத்தி வருவதாக கூறினார். காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெறுவதாகவும், தமிழ் மொழி மிகப்பழமையானதும் நம் கலாசாரத்தின் தொன்மையான மொழியுமாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், வட இந்தியாவில் இருந்து அதிக மாணவர்கள் தமிழகம் வந்து தமிழ் கற்றுக் கொள்வதாகவும், தமிழகத்திலிருந்து பல ஆசிரியர்கள் வட இந்தியாவிற்கு சென்று தமிழ் கற்பித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்புக்கான அடையாளம் என்றும், இந்த காசி தமிழ் சங்கத்தின் அங்கமாக இருப்பது பெருமைக்குரியது என்றும் அவர் கூறினார்.
கலாசார நிகழ்வுகளில் தமிழக ஆட்சியாளர்கள் தேவையில்லாத அரசியல் செய்வதாக விமர்சித்த அவர், புதிய கல்விக் கொள்கையை சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், தமிழக மக்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறினார். தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதற்கு இன்னும் சில நாட்கள் உள்ளதாகவும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
