திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் வி.வி. ராஜேஷ் வெற்றி பெற்று பதவியேற்றார். மொத்தம் 101 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில், மேயராக தேர்வு செய்ய 51 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், ராஜேஷ் அந்த ஆதரவைப் பெற்றார்.
மாநகராட்சி தேர்தலில் பாஜக 50 வார்டுகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மேயர் பதவிக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் வி.வி. ராஜேஷ், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பி சிவாஜி, காங்கிரஸ் சார்பில் சபரிநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கெடுப்பில் ராஜேஷுக்கு 51 ஓட்டுகள் கிடைத்த நிலையில், சிவாஜிக்கு 29 ஓட்டுகளும், சபரிநாதனுக்கு 19 ஓட்டுகளும் கிடைத்தன. ஒரு சுயேச்சை கவுன்சிலர் ராஜேஷுக்கு ஆதரவு அளித்தார்; மற்றொரு கவுன்சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ், அனைவரையும் ஒன்றிணைத்து நகரை முன்னேற்றும் நோக்குடன் செயல்படுவோம் என்றும், 101 வார்டுகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, திருவனந்தபுரம் வளர்ந்த நகரமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
கேரள சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகத்திற்கு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலங்களில், 2016 சட்டசபை தேர்தலில் ஓ. ராஜகோபால் வெற்றி பெற்றதும், 2024 மக்களவை தேர்தலில் திரிச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றதும் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. அந்த வரிசையில், தற்போது வி.வி. ராஜேஷ் முதல் முறையாக திருவனந்தபுரம் மேயராக பதவியேற்றுள்ளார்.
