மதச் சுதந்திரத்தில் தலையீடு; வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது வன்முறை – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
டாக்கா:
வங்கதேசத்தில் இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால், சிறுபான்மையினர் மீது கடுமையான வன்முறைகள் நடக்கின்றன என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
அந்நாட்டில் சமீப காலமாக ஹிந்து சமூகத்தை குறிவைத்து தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. திபு சந்திர தாஸ் என்ற ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்ததுடன், அவரது உடலை மரத்தில் கட்டி வைத்து, பின்னர் நடுரோட்டில் வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் அதிர்வில் இருந்து ஹிந்து மக்கள் மீளுவதற்குள், அவர்களது வீடுகளுக்கும் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் மற்றொரு ஹிந்து இளைஞரும் கும்பல் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த பின்னணியில், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியிட்ட வீடியோ உரையில் தமது கவலைகளை வெளிப்படுத்தினார். வங்கதேசம் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற கனவுடன் நாட்டை நிறுவியதாகக் கூறிய அவர், அந்த நோக்கை அவாமி லீக் அரசு நடைமுறைப்படுத்தி, அனைத்து சமூகங்களும் அமைதியாக வாழ உறுதி செய்ததாக தெரிவித்தார்.
ஆனால் தற்போது சட்டவிரோதமாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படும் இடைக்கால அரசு, அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவது வருத்தமளிப்பதாக ஷேக் ஹசீனா குறிப்பிட்டார். இதன் விளைவாக, சிறுபான்மையினருக்கு எதிராக உயிருடன் எரிக்கும் அளவிலான கொடூர சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இந்த நிலை நீடிக்க வங்கதேச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், சிறுபான்மையினர் சொல்ல முடியாத துயரத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
