ஹெச்1பி விசா விவகாரம்; டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் அனுமதி; இந்தியர்களுக்கு சிக்கல்
வாஷிங்டன்:
ஹெச்1பி விசா தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளை தொடர அனுமதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த முடிவு இந்தியர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, குடியேற்றம் மற்றும் விசா நடைமுறைகளில் கடும் மாற்றங்களை மேற்கொண்டார். வெளிநாட்டு ஊழியர்கள் காரணமாக அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஹெச்1பி விசா முறையில் பல கட்டுப்பாடுகளை விதித்தார். அதன் ஒரு பகுதியாக, திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவின் கட்டணத்தை ரூ.89 லட்சம் வரை உயர்த்தினார்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க வர்த்தக சபை நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஹெச்1பி விசா கட்டண உயர்வுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். விசா தொடர்பான இந்த உத்தரவு சட்ட விதிகளுக்கு உட்பட்டே அமெரிக்க அரசு பிறப்பித்ததாகவும், பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அதிபருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், அமெரிக்க வர்த்தக சபையின் வாதங்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த தீர்ப்புக்கு எதிர்வினையாக, அமெரிக்க வர்த்தக சபை தரப்பில், “நீதிமன்ற முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. ஹெச்1பி விசா விவகாரத்தில் காங்கிரஸின் நோக்கத்தின்படி செயல்பட, சட்ட ரீதியான பிற வழிகளை ஆராய்வோம்” என தெரிவிக்கப்பட்டது.
இதுவரை ஆண்டுதோறும் 85,000 ஹெச்1பி விசாக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 65,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான விசாக்களை இந்தியர்களே பெற்று வந்தனர். இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்தியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
