மாணவர் அமைப்புத் தலைவர் கொலையில் திருப்பம்; தேர்தலை நிறுத்த இடைக்கால அரசு முயற்சிப்பதாக புகார்
டாக்கா: பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள வங்கதேச பொதுத்தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு மாணவர் அமைப்பு தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதியை கொலை செய்துள்ளதாக அவரது சகோதரர் ஒமர் ஹாதி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு வங்கதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. இதன் பின்னர் அவர் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அந்த போராட்டங்களில் முன்னணி வகித்தவர்களில் ஒருவராக ஷெரீப் ஓஸ்மான் ஹாதி இருந்தார். அவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளையும் பிரசாரங்களையும் முன்னெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த 12ம் தேதி டாக்காவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியே வந்த போது, அவாமி லீக் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஒருவரால் ஹாதி சுடப்பட்டார். படுகாயமடைந்த அவர், மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 18ம் தேதி அங்கு உயிரிழந்தார்.
இந்த மரணம் வங்கதேசம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை வெடித்ததுடன், பிரபல செய்தித்தாள் அலுவலகங்கள் மற்றும் அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. பின்னர் ராணுவம் மற்றும் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஹாதியின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றதுடன், அதில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கலந்து கொண்டு, ஹாதியின் கொள்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்நிலையில், ஹாதி நிர்வாகியாக செயல்பட்ட ‘இன்குலாப் மஞ்ச்’ அமைப்பு, அவரது மரணத்திற்கு நீதி கோரி நேற்று முன்தினம் டாக்காவில் போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தில் பேசிய அவரது சகோதரர் ஒமர் ஹாதி, “முகமது யூனுஸ்தான் என் சகோதரரின் கொலைக்கு காரணம். இந்த சம்பவத்தை பயன்படுத்தி தேர்தலை குழப்ப முயற்சி செய்கிறார்கள்” என குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த கொலை தொடர்பாக விரைவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றும், தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதுவரை அரசு தரப்பில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்றும், ஹாதிக்கு நீதி கிடைக்காவிட்டால், யூனுஸும் ஒருநாள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். வெளிநாட்டு சக்திகளுக்கும் எந்த அமைப்புக்கும் அடிபணியாததால்தான் தனது சகோதரர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் வங்கதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனிடையே, வங்கதேசத்தில் ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ‘குளோபல் டிவி’ செய்தி பிரிவு தலைவர் நஸ்னின் முன்னிக்கு நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21ம் தேதி டாக்காவின் தேஜ்கான் பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு வந்த இளைஞர்கள் குழு, அவர் அவாமி லீக் ஆதரவாளர் என கூறி உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளனர். அவ்வாறு செய்யாவிட்டால், சமீபத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட ‘பிரைம் ஆலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ அலுவலகங்களைப் போல குளோபல் டிவியும் எரிக்கப்படும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, வங்கதேச இடைக்கால அரசின் நிதி ஆலோசகர் சலேஹுதீன் அகமது, இந்தியாவுடன் நிலவும் பதற்றத்தை குறைக்க முகமது யூனுஸ் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரங்களைத் தவிர்த்து, பொருளாதார உறவுகளை வலுப்படுத்த அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது பிப்ரவரி தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான ஓட்டுப்பதிவை பாதிக்கும் என அவர்கள் எச்சரித்து, வங்கதேச இடைக்கால அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் வதந்தி காரணமாக கொல்லப்பட்ட இந்து இளைஞர் திபு சந்திர தாசின் குடும்ப பொறுப்புகளை அரசு ஏற்கும் என வங்கதேச கல்வி அமைச்சக ஆலோசகர் அப்ரார் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர், மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தைக்கு நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், தலைநகர் டாக்காவின் மோக்பஜார் பகுதியில் உள்ள மேம்பாலத்திலிருந்து நேற்று இரவு மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். அந்த குண்டு, சாலையோரக் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த 21 வயது இளைஞர் சைபுல் மீது விழுந்து வெடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
