களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை; விஜய் மீது சீமான் பாய்ச்சல்
திருச்சி:
களத்திலேயே இறங்காத ஒருவர் அரசியல் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். களத்தில் ஏன் வரவில்லை என்ற கேள்வியை அவர் நடிகர் விஜய் நோக்கி எழுப்பினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசியல் களத்தில் உண்மையில் யார் நிற்கிறார்கள் என்பதை முதலில் பேச வேண்டும் என்றார். கட்சி தொடங்கிய பிறகும் விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் விஜயின் கட்சி போட்டியிடாததற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பினார். ஈரோட்டில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே மோதியதாகவும், பாஜகவும் அதிமுகவும் களத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டார். களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவை என்றும் அவர் கூறினார்.
ஈரோடு ‘கடப்பாரை’ என விஜய் யாரை குறிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், அந்த ‘கடப்பாரை’ துருப்பிடித்து பழைய இரும்பாக போய்விட்டதாகவும், இப்போது தான் தீய சக்தி என சொல்ல வருகிறார்களா எனவும் சீமான் கேள்வி எழுப்பினார்.
நான்கு எதிரிகள்
விஜய்க்கு ஒரே ஒரு எதிரி இருக்கலாம்; ஆனால் தன்னிடம் நான்கு எதிரிகள் உள்ளனர் என்றும், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என நாலு கட்சிகளுடன் தான் அரசியல் மோதலில் இருப்பதாகவும் சீமான் தெரிவித்தார். விஜயின் கட்சி இப்போதுதான் தொடங்கியுள்ளதால் வளர வேண்டிய கட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் களத்தில் நாம் யார் என்பது இந்த நாலு கட்சிகளுக்கும் நன்றாக தெரியும் என்றும் அவர் கூறினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மறைந்த தலைவர்களின் பெயர்களை சொல்லி இன்னும் எத்தனை காலம் மக்களை ஏமாற்றப் போகிறீர்கள் என சீமான் கேள்வி எழுப்பினார். கொள்கையை முன்வைத்து ஓட்டு கேட்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே என்றும், மற்றவர்கள் சின்னத்தையும் பணத்தையும் காட்டி ஓட்டு கேட்கிறார்கள் என்றும் விமர்சித்தார். பணத்தை வாங்கி ஓட்டு போட்டால் அது நோட்டில் இருக்கும் காந்திக்கு போடும் ஓட்டு என அவர் சாடினார்.
காதில் பூ சுற்றும் வேலை
கொரோனா காலத்தில் நர்ஸ்களை ‘கடவுள்’, ‘தேவதை’ என புகழ்ந்தவர்கள், இன்று அவர்கள் போராட்டம் நடத்தும்போது கண்டுகொள்ளவில்லை என சீமான் குற்றம்சாட்டினார். பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து, தற்போது அவர்களை வெளியேற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பினார். மதம் மனிதனுக்காக உருவானது என்றும், சட்டைக்காக உடம்பு இல்லை என்றும் அவர் கூறினார். 1000 ரூபாயில் ஆடு, மாடு வாங்கி பெருகிவிட்டதாக கூறுவது எல்லாம் காதில் பூ சுற்றும் வேலை என்றும், பொய் சொல்லுவதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டாமா என விமர்சித்தார்.
ஒரு கோடி வாக்காளர்கள்
19 ஆயிரம் கள்ள ஓட்டுகள் இருப்பது மத்திய அமைச்சருக்கு அப்போதே தெரிந்திருந்தால், ஏன் அந்த தேர்தலை ரத்து செய்யவில்லை என சீமான் கேள்வி எழுப்பினார். நாலரை ஆண்டுகள் அமைதியாக இருந்து, தேர்தல் நேரத்தில் இதை பேசுவது ஏன் என்றும் அவர் கேட்டார். நீங்கள் வென்ற பீஹாரில் கள்ள ஓட்டுகள் இல்லையா என்றும் சாடினார். ஒரு கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கப்படுவது சாதாரண பிழை திருத்தம் அல்ல; அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் அவர் கூறினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு கோடி பேரை எப்படி சேர்ப்பீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். இன்று ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தேர்வு செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
5000 கோடியா?
வருடம் முழுவதும் உழைத்தும் தன் வீட்டுப் பண்டிகையை சொந்த செலவில் கொண்டாட முடியாத நிலை தேசிய அவமானம் என சீமான் தெரிவித்தார். இலவச வேட்டி, சேலை, கரும்பு வழங்குவது ஆட்சியின் சாதனை அல்ல; அது மக்களின் வறுமையின் சாட்சி என்றும் கூறினார். பள்ளிக்கூடங்களை ஒழுங்காக கட்டவில்லை; ஆனால் விமான நிலையத்திற்கு 5000 கோடி செலவிடப்படுகிறதே என்றும் கேள்வி எழுப்பினார். நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுவதாகவும், ஆடம்பரத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது வளர்ச்சி அல்ல என்றும் சீமான் தனது உரையை முடித்தார்.
