சபாநாயகர் தேநீர் விருந்து: பிரதமர் மோடியுடன் பிரியங்கா சந்திப்பு
புதுடில்லி:
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எம்பிக்களுக்கு தேநீர் விருந்தளித்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கலந்துரையாடினார்.
டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 19) நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியார் பங்கேற்பை அனுமதிக்கும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ‘விபி ஜி ராம் ஜி’ மசோதா உள்ளிட்டவை விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தொடர் தொடக்கத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட போதும், பின்னர் விவாதங்களில் பங்கேற்றன.
ஒவ்வொரு பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிவிலும், எம்பிக்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது சபாநாயகர் ஓம் பிர்லாவின் வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்றும் அவர் தேநீர் விருந்தை ஏற்பாடு செய்தார். கடந்த முறைகளை விட, இந்த முறை எதிர்க்கட்சி எம்பிக்களும் விருந்தில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் அருகே, காங்கிரஸ் எம்பி பிரியங்கா அமர்ந்திருந்தார். சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின்போது, பிரியங்கா பேசுகையில், தமக்கு உள்ள அலர்ஜி காரணமாக தமது தொகுதியான வயநாட்டில் இருந்து கிடைக்கும் மூலிகை மருந்தை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதனை மோடியும், ராஜ்நாத் சிங்கும் சிரித்தபடி கவனித்தனர். தொடர்ந்து, எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் குறித்து பிரியங்கா கேட்டபோது, அந்த பயணம் சிறப்பாக அமைந்ததாக மோடி பதிலளித்தார்.
மேலும், பார்லிமென்ட் கூட்டத்தொடரில் பங்கேற்க முன்கூட்டியே தயாராக வந்த கொல்லம் தொகுதி எம்பி என்கே பிரேமசந்திரனை மோடி பாராட்டினார்.
இந்த தேநீர் விருந்தின் போது, சில எம்பிக்கள், பழைய பார்லிமென்டில் இருந்ததைப் போல, புதிய பார்லிமென்டிலும் பழைய மற்றும் தற்போதைய எம்பிக்கள் கலந்துரையாடும் மைய மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த மோடி, “அந்த மண்டபம் ஓய்வு பெற்றவர்களுக்கானது; நீங்கள் இன்னும் சேவை செய்ய வேண்டியுள்ளது” எனக் கூற, அங்கு இருந்த எம்பிக்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
