பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பதட்டப்பட வேண்டாம்: இபிஎஸ்
சென்னை:
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாமல் இருந்தால் வாக்காளர்கள் பதற்றமடைய வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தேர்தல் ஆணையம் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில், 90 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை போலி வாக்குகள் எனவும் தெரிவித்துள்ளார். எஸ்ஐஆர் தேவையென அதிமுக ஆரம்பத்திலேயே வலியுறுத்தி வந்த காரணத்தை இது உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
போலி வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களாட்சியின் அடிப்படை விழுமியங்களை சிதைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக முயன்றதாக குற்றம்சாட்டிய இபிஎஸ், அந்த முயற்சி தோல்வியடைந்ததால் திமுக தற்போது ஆத்திரம் மற்றும் பதற்றத்தில் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் தவறவிட்டிருந்தால், அவர்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் அவர் விளக்கினார். புதிய வாக்காளராக பெயர் சேர்க்க விரும்புவோர் தேர்தல் ஆணையத்தின் படிவம்–6 ஐ பூர்த்தி செய்யலாம் என்றும், இடமாற்றம் காரணமாக வாக்கு நீக்கப்பட்டிருந்தால் படிவம்–8 ஐ நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிடும் அடையாள ஆவணங்களில் ஒன்றுடன் சமர்ப்பித்தால், பெயர் நிச்சயமாக சேர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த பணிகளில் அதிமுக ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் வாக்காளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார். முதல்வரும், அவரின் தலைமையிலான திமுக-வும், வாக்குகள் பறிக்கப்பட்டது போல் சித்தரிக்க பல்வேறு கதைகளை பரப்ப முயற்சிப்பார்கள் என்றும், அவர்களின் சதிவலையில் யாரும் சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக இருக்கும் வரை, ஒரு உண்மையான வாக்கும் இழக்கும் நிலை ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அதிமுகவினருக்கு மிக முக்கியமான பொறுப்பு இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலையும், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இறப்பு, இடமாற்றம் அல்லது இரட்டை வாக்கு போன்ற சரியான காரணங்களுக்காக வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சரியான காரணமின்றி வாக்காளர் நீக்கப்பட்டிருந்தால், அந்த வாக்காளரின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்–6 அல்லது படிவம்–8 நிரப்பி, BLO-விடம் வழங்கி, இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதை உறுதி செய்வது கட்சியினரின் முதன்மையான கடமை என இபிஎஸ் கூறியுள்ளார்.
அதேபோல், போலி வாக்குகள் இன்னும் பட்டியலில் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து, அவை நீக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
