திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளதாக கூறப்படும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்தது.
5-வது நாள் விசாரணை
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன், இன்று (டிசம்பர் 18) ஐந்தாவது நாளாக விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்களான ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் ஆகியோரின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா ஆகியோர் ஆஜராகினர்.
அரசு தரப்பு வாதம்
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் பி.எஸ்.ராமன், தனி நீதிபதி முன்போ அல்லது தற்போதைய அமர்வு முன்போ தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், அந்த கட்டமைப்பு ‘தீபத்தூண்’ என்பதைக் உறுதி செய்யும் எந்தத் தெளிவான ஆதாரமும் இல்லை என வாதிட்டார். தீபத்தூண் என்ற பெயரில் குறிப்பிடப்படும் அந்த அமைப்பின் தோற்றம், பயன்பாடு அல்லது நிறுவப்பட்ட காலம் குறித்து எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் முன்கூட்டியே பாரபட்சமான மனப்பான்மை நிலவுகிறது என மனுதாரர்கள் கருதுவதாகவும், தீபத்தூண் குறித்து தெளிவு இல்லாத நிலையில் மாநில அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்க விரும்பவில்லை என்றும் கூறினார். மேலும், இந்த விவகாரம் எழுவதற்கு முன்பே, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல் தூண்களின் வரலாற்று முக்கியத்துவத்தை ஆய்வு செய்ய நில அளவைத்துறை நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1920ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், மாவட்ட நீதிபதி திருப்பரங்குன்றம் மலையை நேரில் ஆய்வு செய்து, மலை உச்சியில் தர்கா மட்டுமே இருப்பதாகவும், அதற்கு அப்பால் வேறு எந்த வழிபாட்டு தலத்திற்குரிய கட்டுமானமும் இல்லை என்றும் பதிவு செய்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அப்போது தீபத்தூண் இருந்திருந்தால், அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அவர் வாதிட்டார்.
மேலும், தீபத்தூணில் விளக்கு ஏற்ற உத்தரவிட முடியுமா என்பதே தனி நீதிபதி முன் இருந்த முக்கிய கேள்வி என்றும், பாரம்பரிய நடைமுறைகளை தீர்மானிக்கும் அதிகாரம் ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் பிரிவு 63ன் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே உள்ளது என்றும் அரசு தரப்பு தெரிவித்தது.
மனுதாரர் தரப்பு வாதம்
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர்கள் ஸ்ரீராம், வள்ளியப்பன் ஆகியோர், உச்சிப்பிள்ளையார் கோயிலில் மட்டும் விளக்கேற்றுவது தான் ஒரே வழக்கமா என்பது தான் உண்மையான கேள்வி என வாதிட்டனர். மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டதாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட நூல்களில் குறிப்புகள் உள்ளதாகவும், அந்த தீபத்தூண் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், சூபி மரபின் படி தர்காவில் விளக்கேற்ற அனுமதிக்கப்படும் நிலையில், தீபத்தூணில் விளக்கேற்றுவதற்கு மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த பகுதிகளில், பின்னர் உரிமை கோரல்கள் எழும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இவ்வாறு அரசு தரப்பும், மனுதாரர் தரப்பும் விரிவான வாதங்களை முன்வைத்ததை தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததாக பதிவு செய்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.
