புதுடில்லி:
சர்வதேச வர்த்தகத்தில் வரிவிதிப்பு ஒரு அழுத்த ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு இந்திய பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், உலக வர்த்தகம் முழுமையாக சுதந்திரமானதோ, நியாயமானதோ அல்ல என்றார். இந்தியா பெரும்பாலும் உள்நோக்குடன் செயல்படுவதாக விமர்சிக்கப்படுகிறதென குறிப்பிட்ட அவர், உள்நாட்டு தொழில்களை பாதுகாப்பதற்காக மட்டுமே வரிகளை இந்தியா பயன்படுத்தி வந்துள்ளதாக விளக்கினார். இந்தியா ஒருபோதும் வரிவிதிப்பை ஆயுதமாக பயன்படுத்தியதில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால் சர்வதேச அளவில் சில நாடுகள் வரிவிதிப்பை ஒரு அழுத்த கருவியாக மாற்றியுள்ளதாகவும், இத்தகைய சூழலில் இந்தியா மிக கவனமாக பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஒட்டுமொத்த பொருளாதார வலிமையே இந்தியாவுக்கு கூடுதல் பலனை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், சில நாடுகள் வரிகள் சரியல்ல என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்றும் கூறி வந்த நிலையில், திடீரென புதிய நாடுகள் வரி விதிப்பை அறிவிப்பது கவனிக்கத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா விதித்த அதிக வரிகள் காரணமாக உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், வரிவிதிப்பு ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதேபோல், மெக்சிகோவும் சமீபத்தில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகளுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
