தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரம்
மதுரை:
திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம்–ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர், காணொளி மூலம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை ஏற்று, வழக்கை ஜனவரி 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மதுரை மாவட்டம் எழுமலை பகுதியைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த டிசம்பர் 1ம் தேதி, “திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களுடன் சேர்த்து, தீபத் தூணிலும் டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபத்தை சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத் தூணிலும் தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் பொறுப்பு” என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை நிறைவேற்றாததாகக் கூறி, கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக டிசம்பர் 3ம் தேதி விசாரித்த நீதிபதி, “உச்சிப் பிள்ளையார் கோயிலில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் தீபத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. மனுதாரர் உட்பட 10 பேரை மலைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கலாம். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க சிஐஎஸ்எப் வீரர்களை அனுப்ப உயர் நீதிமன்ற சிஐஎஸ்எப் கமாண்டன்டுக்கு உத்தரவிடப்படுகிறது” என தெரிவித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, டிசம்பர் 4ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அதே நாளில் நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையில், “கார்த்திகை தீபத்தை தீபத் தூணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதனை நிறைவேற்றிய விவரங்களை அரசு தரப்பில் அறிக்கை மூலம் சமர்ப்பிக்க வேண்டும்” என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு டிசம்பர் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தலைமைச் செயலர் மற்றும் சட்டம்–ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொளி மூலம் நீதிபதி முன் ஆஜராகினர். மதுரை போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜரானார்.
விசாரணையின் போது, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என தலைமைச் செயலர் கோரினார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கை வரும் ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
