இருமொழிக் கொள்கையில் ஸ்டாலின் இரட்டை வேடம் – இபிஎஸ்
சென்னை:
நவோதயா பள்ளிகள் தொடர்பான விவகாரத்தில், இருமொழிக் கொள்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் கடந்த 15ம் தேதி தள்ளுபடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நவோதயா பள்ளிகள் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த முக்கிய வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை நியமித்து தமிழகத்தின் நிலைப்பாட்டை சரியான முறையில் எடுத்துரைக்க திமுக அரசு தவறியுள்ளதாகவும், அதே நேரத்தில் அரசுக்கு சாதகமான பிற வழக்குகளில் மட்டும் பல கோடி ரூபாய் செலவில் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாடுவதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மொழி தொடர்பான இந்த வழக்கில் அலட்சியமாக நடந்து கொண்டது மூலம், இருமொழிக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாடு தமிழக மக்களுக்கு வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நவோதயா பள்ளி வழக்கில் தமிழகத்தின் வாதங்களை முறையாக முன்வைக்காத திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் இபிஎஸ் கூறியுள்ளார்.
வாக்குறுதி என்ன ஆனது?
இதனைத் தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், ஊதியம் அதிகரிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததாக இபிஎஸ் நினைவூட்டியுள்ளார்.
ஆட்சிக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், சமீபத்தில் வெளியிட்ட நீண்ட அறிக்கையிலும் இதுகுறித்து எந்த விளக்கமும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இவ்வாறு வாக்குறுதிகளை மீறிய நிலையில், அரசியல் பேசுவதற்கு முதல்வருக்கு என்ன தகுதி உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த திட்டமிட்டிருப்பதை வரவேற்பதாக தெரிவித்த இபிஎஸ், திட்டத்தின் பெயர் மாற்றமின்றி தொடர வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
