சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், மதமாற்ற பிரசங்கம் நடைபெறுவதாகக் கூறி அதை தடுக்க முயன்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிங்கம்புணரியில் மேலூர் சாலையில் உள்ள ஆயில் மில் வளாகத்தில், கடந்த டிசம்பர் 14ம் தேதி இரவு மதமாற்ற பிரசங்கம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் தயாளன், அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றியதுடன், அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு தடை விதித்தார். அனுமதி பெறாமல் ஆயில் மில் வளாகத்தில் கட்டாய மதமாற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறி, இதன் ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் அந்த புகாருக்கு போலீசார் எந்த மனு ரசீதையும் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகி பாலசுப்பிரமணியன், பாஜ நிர்வாகி செந்தில்குமார், முருகசெல்வம், சந்தோஷ்குமார் மற்றும் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அளித்த புகார்களுக்கு இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவோ, மனு ரசீது வழங்கப்படவோ இல்லை என்றும் குற்றம்சாட்டி, பாஜ மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமையில், போலீஸ் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
