Skip to content Skip to footer

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு வரும் 19ல் பிரதமர் துவக்கி வைக்கிறார்

கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டை, வரும் 19ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

இது குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவை ‘கொடிசியா’ வளாகத்தில் தென்னிந்திய அளவில் இயற்கை வேளாண் மாநாடு, 19 முதல் 21 வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை வேளாண் விவசாயிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டை, 19ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர். அதன்பின், தென்மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 50 வேளாண் விஞ்ஞானிகளுடன், ஒரு மணி நேரம் கலந்துரையாடுகிறார்.

வேளாண் கொள்கை குறித்து, மத்திய அரசே முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் இருப்பதால், பிரதமர் மோடி பங்கேற்கிறார். கருத்தரங்கில் நிறைவேற்றும் தீர்மானங்களை பிரதமரிடம் கொடுக்க உள்ளோம். இயற்கை வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அறிஞர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, தீர்மானங்கள் வடிவமைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Add Comment