எஸ்ஐஆர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் – ராகுலுக்கு அமித் ஷா சவால்
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் கர்னாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “ராகுல் காந்தி பொறுப்பான விவாதத்தை விரும்பினால் நாடாளுமன்றத்திற்கு வந்து விவாதிக்கலாம். நேருக்கு நேர் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், அவரால் அதை எதிர்கொள்ள முடியாது. எப்போதும் போல அவர் விவாதத்திலிருந்து விலகிவிடுவார்” என்று விமர்சித்தார்.
மேலும், எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமருடன் விவாதிக்க விரும்பினால், அவருக்கு நேரடியாகக் கடிதம் எழுதுமாறும் ராகுல் காந்தியிடம் கூறினார்.
“இதை உங்களுக்கு ஒரு சவாலாகவே விடுக்கிறேன். 80 ஆண்டுகள் பழமையான ஜனநாயக நாடு, உங்கள் ஏமாற்று வேலைகளுக்கு ஏமாந்துவிடும் என உண்மையிலேயே நம்புகிறீர்களா? உங்களின் வெளிநாட்டுப் பயணம் குறித்து மக்களுக்கு விளக்கம் அளியுங்கள்” என்றும் அமித் ஷா பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் ராகுல் காந்தி குறித்து அறிந்துகொள்வது மக்களின் உரிமை எனக் குறிப்பிட்ட அமித் ஷா, நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் செயல்பாடுகளை முடக்குவதை ராகுல் காந்தி வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
