இந்தியாவில் புல்லட் ரயில் திட்டங்கள் விரிவாக்கம்: டெல்லி – குவஹாத்தி வழித்தடத்துக்கு ஒப்புதல்
புதுடெல்லி: இந்தியாவில் புல்லட் ரயில் திட்டங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. மகாராஷ்டிராவின் மும்பை – குஜராத்தின் ஆமதாபாத் இடையிலான முதல் புல்லட் ரயில் வழித்தடப் பணிகள் 62.16 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், டெல்லி – அசாமின் குவஹாத்தி இடையிலான புதிய வடக்கு புல்லட் ரயில் வழித்தடத்துக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும், தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புனே – பெங்களூரு உள்ளிட்ட புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அதிவேக புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்காக தேசிய அதிவேக ரயில் நிறுவனம் (NHSRCL) உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மும்பை – ஆமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் இந்தத் திட்டம், ஜப்பானின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் புல்லட் ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளன.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் தற்போது 62.16 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 2029ஆம் ஆண்டில் நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு புல்லட் ரயில் வழித்தடம்
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளை இணைக்கும் வகையில் டெல்லி முதல் அசாமின் குவஹாத்தி வரை புதிய புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சிலிகுரி வழியாக இந்த வழித்தடம் செல்லும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் பகுதியாக சிலிகுரி விளங்குவதால், இந்த வழித்தடம் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடம் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா, லக்னோ, கான்பூர், வாரணாசி உள்ளிட்ட நகரங்கள் மற்றும் பீஹாரின் முக்கிய நகரங்கள் வழியாகச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்வேறு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாகக் குறையும் எனக் கூறப்படுகிறது. திட்டமிடப்பட்டுள்ள பயண நேர விவரங்களின்படி:
- டெல்லி – ஆக்ரா: 59 நிமிடங்கள்
- டெல்லி – கான்பூர்: 1 மணி நேரம் 45 நிமிடங்கள்
- டெல்லி – லக்னோ: 2 மணி நேரம் 12 நிமிடங்கள்
இந்த வடக்கு புல்லட் ரயில் வழித்தடத்துக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தெற்கு புல்லட் ரயில் வழித்தடம்
கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெங்களூரு – மும்பை இடையிலான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையைத் தொடங்கி வைத்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் புல்லட் ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஏற்கெனவே 4,000 கி.மீ. தொலைவுக்கான புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 3,000 கி.மீ. தொலைவுக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
தெற்கு புல்லட் ரயில் வழித்தடம் புனே, ஹைதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் மாநிலங்களின் முக்கிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், பெங்களூரு – சென்னை இடையிலான பயண நேரம் 1 மணி நேரம் 13 நிமிடங்களாகவும், பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான பயண நேரம் 2 மணி நேரம் 10 நிமிடங்களாகவும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூருவில் இருந்து ஹுப்பள்ளி வழியாகப் புனே வரை செல்லும் வழித்தடம் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
