சிறை பாதுகாப்பை ஆய்வு செய்ய முன்னாள் டிஜிபி தலைமையில் உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு
சென்னை: தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளின் பாதுகாப்பு நிலை குறித்து முதல்வர் விஜய் ஆய்வு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கைதிகள் தப்பிச் சென்றதற்குக் காரணமான பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பதும் இக்குழுவின் பணியாகும்.
இந்தக் குழுவுக்கு முன்னாள் டிஜிபி திரிபாதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபி சங்கர் மற்றும் சிறைத்துறை முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு வழிவகுத்த பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து இக்குழு விரிவான விசாரணை நடத்தும். மேலும், சிறைகளில் தற்போது உள்ள பாதுகாப்புக் கட்டமைப்பு மற்றும் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் ஆய்வு செய்யும்.
சிறைகளில் நிலவும் பணிச்சுமைக்கு ஏற்ப போதுமான அளவில் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும் குழு மதிப்பீடு செய்யும். சிறைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும் என்றும், பணியில் கவனக்குறைவாகச் செயல்படும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
