இந்தியாவின் கடல்சார், சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு பெரும் உத்வேகம்: பிரதமர் மோடி
இந்தியாவின் கடல்சார் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10,000 கோடி மதிப்பிலான கண்டெய்னர் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கிராமப்புற நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சியை முன்னெடுக்கவும் ரூ.7,395 கோடி மதிப்பிலான பிரதமரின் வளர்ச்சி அடைந்த கிராம தன்னாட்சித் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கண்டெய்னர் உற்பத்திக்கு ஊக்கம்
கண்டெய்னர் தயாரிப்புத் துறையில் புதிய மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் உற்பத்தியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உலகளவில் போட்டியிடக்கூடிய தரச் சான்றிதழ் பெற்ற கண்டெய்னர்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கும், உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் இந்த முயற்சி உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் துறைக்கு ஆதரவு
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுப் பொருட்கள் உற்பத்திச் சூழலை உருவாக்கும் நோக்கில், கேலோ இந்தியா விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி, புத்தாக்கம், திறன் மேம்பாடு மற்றும் தயாரிப்புகளின் தரத்தை உயர்த்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிக்கு வாய்ப்பு
கண்டெய்னர் உற்பத்தி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்புத் துறைகளில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேக் இன் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத் திட்டங்களின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதிலும், உலகளாவிய விளையாட்டுத் துறையில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதிலும் இந்தத் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
