இந்தாண்டுக்குள் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா விண்கலம் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்!
திருப்பதி: இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா சோதனை விண்கலம் இந்தாண்டுக்குள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மேம்பட்ட வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் தொழில்நுட்பத்துக்கான என்.வி.எஸ்.-03 செயற்கைக்கோளை, அக்டோபர் 30ஆம் தேதி இரவு 11.51 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
செயற்கைக்கோளின் மாதிரியைத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து இஸ்ரோ குழுவினர் வழிபாடு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்த ஆண்டில் இந்தியா ஏவவுள்ள ஐந்தாவது செயற்கைக்கோள் இதுவாகும் என்றும், ஏற்கெனவே ஒரு தனியார் செயற்கைக்கோளும் ஏவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது மூன்று வழிசெலுத்தல் செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், என்.வி.எஸ்.-03 செயற்கைக்கோள் இந்தியாவின் வழிசெலுத்தல் சேவைகளை மேம்படுத்த உதவும் என்றார். நிலைப்படுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் நேரக் கணக்கீடு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்றும் விளக்கினார்.
ககன்யான் திட்டத்தில் முன்னேற்றம்
இந்தியாவின் முக்கிய விண்வெளித் திட்டமான ககன்யான் திட்டம் திட்டமிட்டபடி முன்னேறி வருவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். இதுவரை சுமார் 8,000 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இதற்காக முதலில் மூன்று ஆளில்லா சோதனை விண்கலங்கள் அனுப்பப்பட உள்ளன. அவற்றின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் நாராயணன் தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா சோதனை விண்கலத்தை இந்தாண்டுக்குள் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
