அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்: சீமான் அறிவிப்பு!
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதி காலியானது.
இசக்கி சுப்பையாவைத் தவிர்த்து மேலும் நான்கு அதிமுக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ததால், மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு முடிவடைந்த பிறகு காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவார் என கடந்த சில மாதங்களாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார்.
அப்போது அவர், “அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். என்னைப் பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள்? திரைக்கவர்ச்சி மங்கும். உறவுகள் வேறு; அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. நான் எப்போதுமே அனைத்து தேர்தல்களிலும் பொதுவேட்பாளர்தான்” என்று தெரிவித்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
