எஸ்ஐஆர் உத்தரவுகள் அனைத்தும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் மற்றும் எஸ்ஐஆர் உத்தரவுகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக நாளிதழில் வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் மற்றும் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி ஆகியோர், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். வழக்கு முடியும் வரை ஞானேஷ் குமாரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரம்
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2025 ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடைமுறையின்படி, சம்பந்தப்பட்ட பிரிவிலிருந்து அனுப்பப்படும் கோப்புகள் முதலில் ஒரு தேர்தல் ஆணையருக்கும், பின்னர் மற்றொரு தேர்தல் ஆணையருக்கும், இறுதியாகத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் அனுப்பப்படும் எனப் பிரமாணப் பத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தப்பட்ட கோப்புகளில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையரின் கையொப்பங்களுடன் உறுதிப்படுத்தப்படும் என்றும், பின்னர் தேர்தல் ஆணையச் செயலகம் அவற்றை அறிவித்து நடைமுறைப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்ற தேர்தல் ஆணையர்களுக்குத் தெரிவிக்கும் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளோ, தேர்தல் ஆணையர்கள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கோ அதிகாரிகளுக்கோ தெரிவிக்கும் கருத்துகளோ, 2023ஆம் ஆண்டு சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவாகக் கருதப்படாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நாளிதழில் வெளியான செய்தியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையம், அவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளது.
மேலும், படிவம் 6 தொடர்பான குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம், அந்தப் படிவத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
