தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: 13 பேர் கைது; 4 பேரைத் தேடும் போலீசார்
தேனி: தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடியவர்களில் ஒருவர் சரணடைந்த நிலையில், இதுவரை 13 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 4 பேரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டச் சிறை, ஆண்டிபட்டி தாலுகாவில் தேக்கம்பட்டி அருகே அமைந்துள்ளது. இங்கு நான்கு பிளாக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்றிரவு மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் மதன்மோகன் அந்தப் பிளாக்கைத் திறந்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த 17 கைதிகள் உதவி ஆய்வாளர் மதன்மோகனைத் தாக்கிவிட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, சிறைக் கதவு அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தங்கபாண்டியையும் தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
காயமடைந்த உதவி ஆய்வாளர் மதன்மோகன் மற்றும் காவலர் தங்கபாண்டி ஆகியோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சிறையைச் சுற்றியுள்ள 10 கி.மீ. பகுதிகளில் போலீசார் தேடுதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பும் ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டன.
தப்பியோடிய கைதிகளில் ஒருவரான பிரவீன், மீண்டும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்தார். இதற்கிடையே, சிறையில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறை ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முதற்கட்டமாக நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் வனப்பகுதியில் தங்கியிருந்த மேலும் எட்டு பேர் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் சரணடைந்தவர் உட்பட 13 பேர் மீண்டும் சிறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
