தசரா விரதம் இருந்த மாணவர்களின் மாலையை அகற்றியதாகப் புகார்: தலைமையாசிரியர் மீது வழக்கு
தூத்துக்குடி: தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருந்து வந்த மாணவர்களின் மாலைகளைக் கழற்றியதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர் ரஞ்சித் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, கையில் காப்புக் கட்டி விரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆத்தூரில் செயல்பட்டு வரும் சண்முகசுந்தரம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த முன்தினம் பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் மாலைகளையும் காப்புகளையும் அகற்றுமாறு தலைமையாசிரியர் ரஞ்சித் சிங் கூறியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மறுப்புத் தெரிவித்த மாணவர் ஒருவரின் மாலையைத் தலைமையாசிரியரே கழற்றியதுடன், அந்த மாணவரைத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோரும் ஹிந்து முன்னணி அமைப்பினரும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அம்மன் பாடல்களைப் பாடியபடி தரையில் அமர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தலைமையாசிரியர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், பின்னர் தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்தூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசாரின் அறிவுறுத்தலின்படி, போராட்டக்காரர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் ரஞ்சித் சிங் மன்னிப்புக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில், மத நம்பிக்கைகளை வேண்டுமென்றே அவமதித்ததாக ரஞ்சித் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக 90 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
