ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதற்கான காரணம் என்ன என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கக் கோரி, அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெகதீசன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் ஊர்வலங்களுக்கு அனுமதி பெற அமைப்பினர் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், திருவிழாக் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டே ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அரசு தரப்பு விளக்கத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, ஊர்வலம் நடத்துவது தேசவிரோதச் செயலா என்று கேள்வி எழுப்பினார். ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது தேவையற்ற வழக்குகளுக்கும், காவல்துறை மீதான எதிர்மறையான விமர்சனங்களுக்கும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் அரசு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வைக் காண வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
