சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
ரியாத்: சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், அங்கு பாதுகாப்பு தொடர்பான பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியர்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தல்
தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தேவைப்படும் நேரங்களில் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ வழிகளில் வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தற்போதைய பாதுகாப்புச் சூழல் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத செய்திகள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேர அவசர உதவி எண்
ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகமும் தேவைக்கேற்ப புதிய தகவல்களையும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களின் உதவிக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா அவசர உதவி எண் 8002471234 தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது. சவுதியில் வசிக்கும் இந்தியர்கள், சமீபத்திய தகவல்களைப் பெற இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
