புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுக டெபாசிட் இழப்பு: 2,664 வாக்குகள் மட்டுமே பெற்றது
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் தனித்துப் போட்டியிட்ட திமுக, 2,664 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தது. இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
நான்காவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மொத்தம் 21,756 வாக்குகள் பதிவாகியிருந்தன. டெபாசிட்டைப் பெறுவதற்கு 3,626 வாக்குகள், அதாவது பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெற வேண்டியிருந்தது. ஆனால், திமுக அந்த எண்ணிக்கையை எட்டத் தவறியது.
இதற்கிடையே, தட்டாஞ்சாவடி தொகுதியில் நோட்டாவுக்கு 225 வாக்குகள் பதிவாகின. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகுமாரி 172 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் 310 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார்.
