அக். 2 முதல் வெற்றிப் பயணம் திட்டம்
தமிழகத்தில் மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை (அக். 2) முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் உள்ளிட்டோருக்கான கட்டணமில்லா ‘வெற்றிப் பயணம்’ திட்டம் அக்டோபர் 2 முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
12,692 அரசுப் பேருந்துகளில் இலவச பயணம்
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகளும், புறநகர் சாதாரணப் பேருந்துகளும் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன.
மேலும், 40 கி.மீட்டருக்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளிலும் இந்தக் கட்டணமில்லா பயண வசதி விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி மொத்தம் 12,692 அரசுப் பேருந்துகள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
தினமும் 84.32 லட்சம் மகளிர் பயன்
தமிழகத்தில் 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள், அதாவது சுமார் 69 சதவீத பேருந்துகள், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் இயக்கப்பட உள்ளன.
மொத்தம் 1,94,649 திட்டமிடப்பட்ட பேருந்து நடைகளில் 1,65,312 நடைகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் மகளிர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவிகள், பணிபுரியும் பெண்களுக்கு பயன்
இந்தத் திட்டத்தின் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், பெண்கள் பணியிடங்களுக்குச் செல்லவும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க முடியும்.
மேலும், மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசியச் சேவைகளுக்காக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கும் இந்த விரிவாக்கம் பயனளிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
“மகளிருக்கு கட்டணமில்லா வெற்றிப் பயணம்”
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தின் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா ‘வெற்றிப் பயணம்’ திட்டம் அக்டோபர் 2 முதல் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
