செய்தி
கோவை: தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இணைந்து நடத்திய விசாரணையில், கோவையில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மக்சூத் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஆன்லைன் மூலம் இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச இளைஞர்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி, பெங்களூருவில் உள்ள மேன்பவர் ஏஜென்சி மூலம் கோவைக்கு வேலைக்காக வந்ததாக கூறப்படுகிறது.
கோவை ஹோப் காலேஜ் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த அவர், அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முகமது நபீல் கைது
இந்த வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 12-ம் தேதி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது நபீல் என்பவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச போலீசார், நபீலை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது கோவையில் தங்கியிருந்த மக்சூத் அலி குறித்த தகவல்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கோவையில் இணைந்து விசாரணை
இதையடுத்து உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கோவை வந்தனர். கோவை மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து மக்சூத் அலி தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, மக்சூத் அலி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தொடர்ந்து விசாரணைக்காக உத்தரப் பிரதேச போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்கொய்தா தொடர்பு குறித்து விசாரணை
மக்சூத் அலிக்கு அல்கொய்தா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், அவரது வாட்ஸ்அப் எண்ணில் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கூறப்படும் பல தொலைபேசி எண்கள் இடம்பெற்றிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரத்யேக செயலி உருவாக்கியதாக தகவல்
சமூக வலைதளங்கள் மூலம் குழுக்களை உருவாக்கி பயங்கரவாத கருத்துகளை பரப்பியதாகவும், தகவல் தொடர்புக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கியதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
மக்சூத் அலி கோவைக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் வந்ததாகவும், அவர் கோவையில் வேறு யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
