“குடமுழுக்கு விழாவில் அரசியல் தலையீடு இல்லை”
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நாளை (செப்.17) காலை 7.40 மணி முதல் 8.10 மணி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ரமேஷ் இன்று மதுரையில் குடமுழுக்கு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
குடமுழுக்கு ஏற்பாடுகள் 100% நிறைவு
பாஸ் சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்தார்.
குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாட்டுப் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் இரண்டு ஷிப்டுகளில் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மின்தடை ஏற்படாமல் இருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
9,000 பேரை அனுமதிப்பது குறித்து ஆய்வு
கோயிலின் மேல் தளத்தில் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது என்பது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக 9,000 பேரை அனுமதிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், கட்டடத்தின் நிலைத்தன்மை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் முடிவின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“பாஸ் விவகாரத்தில் தலையிடவில்லை”
பாஸ் விவகாரத்தில் அரசு எந்தத் தலையீடும் செய்யவில்லை என்றும், பாஸ்களை தாங்கள் பார்த்துக்கூட இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் 2,000 பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பாஸ் பெற்றவர்களும் கோயிலின் மேல் தளத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சித்திரை வீதியில் பொதுமக்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், கோபுரத்துக்கு செல்வோர் வந்து செல்லும் வழியாக மட்டுமே அந்தப் பகுதி பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
“மக்கள் பாதுகாப்பு மட்டுமே நோக்கம்”
மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பணிகளில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என மீண்டும் தெரிவித்த அமைச்சர், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே அரசு சார்பில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
மேலும், கோயில் அறங்காவலர் குழுவை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் ஓதுவார்களுக்கு அனுமதி
தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், குடமுழுக்கு விழாவில் தமிழ் ஓதுவார்கள் யாக பூஜைகள் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசால் நியமிக்கப்பட்ட ஓதுவார்கள் யாரும் தங்களுக்கு வருத்தம் இருப்பதாக தெரிவிக்கவில்லை என்றும், தமிழ் ஓதுவார்களுக்கு கலசத்தில் நீர் ஊற்றவும், கருவறைக்குள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
