மதுரை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த வழக்கில், டிஎஸ்பி உள்ளிட்ட 4 பேர் மீது கொலைக்குரிய பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து, அவர்களை காவலில் வைக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகைகள் திருட்டு புகார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோவில் காவலாளியாக அஜித்குமார் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி, நிகிதா என்பவர் தனது நகைகளை அஜித்குமார் திருடியதாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அஜித்குமாரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிபிஐ விசாரணை
அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவக்குமார் மற்றும் ஏட்டு இளையராஜா ஆகியோரின் பெயர்களும் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டன.
4 பேர் மீது கொலைக்குரிய பிரிவில் குற்றச்சாட்டு
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன், டிஎஸ்பி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவக்குமார் மற்றும் ஏட்டு இளையராஜா ஆகிய 4 பேர் மீதும் கொலைக்குரிய பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
மேலும், நான்கு பேரையும் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
